தங்காலை, யாயவத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சுமார் 3 கிலோகிராம் ஹெரோயினுடன் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
பலபொத்த கிழக்கு பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேக நபர், பேலியகொடை வடக்குப் பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பேலியகொடை வடக்குப் பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் பேரில், அதிகாரிகள் குழுவொன்று தங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலபொத்த கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபரிடம் இருந்து 2,300 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, இந்த போதைப்பொருள் தனது சகோதரனால் தனக்கு வழங்கப்பட்டதாகவும், தனது சகோதரனிடம் மேலும் போதைப்பொருள் இருப்பதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், பலபொத்த, யாயவத்த பகுதியில் உள்ள 29 வயதுடைய சகோதரனின் வீட்டை பொலிஸார் சோதனையிட்டனர்.
பொலிஸார் அங்கு சென்றபோது, சந்தேக நபர் வீட்டிலிருந்து தப்பியோடியுள்ளார் இருப்பினும்,பொலிஸாரின் அதிரடி சோதனையில் வீட்டிற்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோகிராம் 842 கிராம் ஹெரோயின் அடங்கிய பொதி ஒன்றை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தனது சகோதரனுக்கு இந்த ஹெரோயின் பொதி கடலில் மிதந்து வந்தபோது கிடைத்ததாக பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரிடம் இருந்து தப்பியோடிய 29 வயதுடைய சந்தேக நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
