எரிபொருள் விலையை உயர்த்தி அரசாங்கம் ஒட்டுமொத்தப் பொதுமக்கள் மீதும் பேரிடியை இறக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கம் அளித்துவரும் பொய் வாக்குறுதிகளைக் கண்டித்தும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முன்னெடுக்கத் தயங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை (01) விசேட கூற்றொன்றை முன்வைத்து இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒரு நாடாக அனைவரும் சிறுவர் தினத்தையும் உலக முதியோர் தினத்தையும் கொண்டாடும் இந்த வேளையில், பாதுகாப்பான சூழலில் சிறுவர்கள், குழந்தைகள், இளைய தலைமுறையினர் மற்றும் முதியோர் உட்பட அனைத்துக் மக்களுக்கும் பாதுகாப்பான, வளமான நல்வாழ்வை ஏற்படுத்தித் தர வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால், இந்த முக்கிய தினங்கள் பிறப்பதற்குச் சில கணங்களுக்கு முன்பாக, தற்போதைய அரசாங்கம் பொதுமக்கள் அனைவர் மீதும் சுமையைச் சுமத்தும் வகையில் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளனர்.
முன்னதாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, துறைமுகத்தில் இறக்கப்படும் விலையிலேயே எரிபொருளை வழங்குவதாகவும், எரிபொருள் மீதான வரிகளை நீக்கி, ஊழல் மற்றும் கமிஷன் முறைகளை ஒழித்து குறைந்த விலையில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றும் தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட ஆளுமக்கட்சியினர் உறுதியளித்திருந்தனர். ஆனால், இன்று அந்த வாக்குறுதிகள் அனைத்தையும் அரசாங்கம் முற்றிலும் மீறியுள்ளனர்.
நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களுக்கும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அரசாங்கம் ஏமாற்றியுள்ளது. அண்மையில் பில்லியன் கணக்கில் நிதி ஒதுக்கி இனிவரும் மாதங்களில் எரிபொருள் நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறியிருந்த போதிலும், தற்போது நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விலையேற்றமானது வாக்குறுதியளிக்கப்பட்ட மானியத்தின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
திறைசேரியில் பெருமளவு நிதி எஞ்சியிருப்பதாகக் கூறிக்கொள்ளும் அரசாங்கம், அந்தப் பணத்தைப் பயன்படுத்தி வறுமையில் வாடும் சாதாரண மக்களுக்கு ஏன் நிவாரணம் வழங்க முன்வரவில்லை? இனியாவது இத்தகைய வேடிக்கையான அரசியலிலிருந்து விலகி, நிலவும் உண்மை நிலையை உணர்ந்து நாட்டிற்கும் மக்களுக்கும் உரிய நிவாரணங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து வருவதால், அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அரசாங்கத்துக்கு எதிரான ஜனநாயக ரீதியிலான சவால்களை விடுக்கப் பின்வாங்கப் போவதில்லை என்றார்.
