பிரான்ஸில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
நேற்று (06) செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கணக்கின்படி சுமார் 2 இலட்சத்து 66 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். போராட்ட ஏற்பாட்டாளர்கள் இந்த எண்ணிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரம் வரை இருப்பதாக தெரிவித்துள்ளனர். பாரிஸில் மட்டும் 56 ஆயிரம் பேர் பங்கேற்றதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை, அதிகளவான மாணவர்கள் ஒரே வகுப்பில் கற்க வேண்டிய நிலை, போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமை மற்றும் பாடசாலை கட்டடங்களின் மோசமான நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனுடன், போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற போராட்டங்களின் போது பல இடங்களில் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக அமைப்புகள் இணைந்து கல்வித்துறைக்கான அவசர நடவடிக்கைகள் அடங்கிய 10 அம்ச கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளன. பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கட்டடங்களைப் புதுப்பித்தல், கூடுதல் பணியாளர்களை நியமித்தல், கல்வி நிறுவனங்களில் வளங்களை அதிகரித்தல் மற்றும் உயர்கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் அடங்குகின்றன.
இந்நிலையில், மாணவர் அமைப்புகள் இன்று (07) அரசாங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளதுடன், தங்களது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் நாளை (08) முதல் பல்கலைக்கழகங்களை மீண்டும் முடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என எச்சரித்துள்ளன.
பிரான்ஸில் கடந்த சில வாரங்களாக நீடித்து வரும் இந்த மாணவர் போராட்டம் தற்போது ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆதரவையும் பெற்று தேசிய அளவிலான போராட்டமாக விரிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
