இலங்கையில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள எரிபொருள் வரிசைகள் தொடர்பில் தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், சில தனியார் நிறுவனங்கள் உள்நாட்டு சந்தைக்கான விநியோகத்தை குறைத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) கூடுதல் எரிபொருளை சந்தைக்கு விநியோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் எவ்வளவு எரிபொருள் வழங்க வேண்டும் என்பதை அரசாங்கத்தால் நேரடியாக கட்டுப்படுத்த முடியாதபோதிலும், நாட்டில் குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பேணுமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைந்து அதிகளவில் எரிபொருள் கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
