ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் எவ்வித வாக்கெடுப்புமின்றி நேற்று (8) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது ஏற்பட்டுள்ள சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதே இந்தத் திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும்.
குறிப்பாக, சட்டத்தின் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிப் பிரதிகளுக்கு இடையிலான முரண்பாடுகள், ஊழல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடர்வதில் காணப்படும் சிக்கல்கள் ஆகியவற்றைத் தீர்ப்பதற்கு புதிய திருத்தங்கள் வழிவகுக்கும்.
அத்துடன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் நிர்வாக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் இந்தத் திருத்தங்கள் கவனம் செலுத்துகின்றன.
மேலும், சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களை மத்திய மின்னணு முறைமை மூலம் சமர்ப்பிக்கும் நடைமுறையை மேலும் ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தங்கள் மூலம் இலங்கையின் ஊழல் எதிர்ப்பு சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேலும் உறுதி செய்வது எதிர்பார்க்கப்படுகிறது.
