கொழும்பு துறைமுக நகரில் தொழிலாளர் விடுதிக்கு அருகில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், கொழும்பு துறைமுக நகரில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்காக வந்திருந்தவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, நேற்று (09) இரவு தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தின்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. இதன்போதே குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளான அவர், சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்திற்கான முழுமையான காரணம் மற்றும் ஏனைய விபரங்கள் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
