மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஷாய் ஹோப், ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
நடப்பு சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஷாய் ஹோப் சிறந்த தேர்வாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வின், ஷாய் ஹோப்பின் ஐபிஎல் வாய்ப்பு குறித்து கூறுகையில், “ஷாய் ஹோப் ஐபிஎல் இல் விளையாட தகுதியானவரா என்றால், நிச்சயமாகத் தகுதியானவர். என் பார்வையில் அவர் மிகச் சிறந்த வீரர்.
இந்த ஏலத்தில் அவர் தேர்வு செய்யப்பட வேண்டும். அவர் தேர்வு செய்யப்படுவார் என்று நம்புகிறேன். ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அவர் ஒரு தேர்வாக இருக்கலாம்” என்றார்.
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே ஐதராபாத்தில் நடைபெற்ற 4 வது ரி20 போட்டியில் ஷாய் ஹோப் அதிரடியாக விளையாடினார். 50 பந்துகளில் 4 பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்கள் குவித்தார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி20 தொடர்களில் தலா இரண்டு சதங்களை அடித்துள்ள அவர், இந்த சுற்றுப்பயணத்தில் ஏழு இன்னிங்ஸ்களில் 539 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் நான்கு சதங்களும் ஒரு அரைசதமும் அடங்கும்.
மேலும், ரி20 சர்வதேசப் போட்டிகளில் 2,000 ஓட்டங்களைக் கடந்த நான்காவது மேற்கிந்திய தீவுகள் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
