நாட்டில் நிலவும் உள்நாட்டு எரிவாயுத் தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்காக, 3,900 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று (18) நாட்டை வந்தடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய ஒரு இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் நேற்று (17) சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், இன்று 85,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக எரிவாயு விநியோகம் இடம்பெறாமையே சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டுக்குக் காரணம் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தையில் நிலவும் லிட்ரோ எரிவாயுத் தட்டுப்பாடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் (20) முழுமையாகத் தீர்க்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
லாஃப்ஸ் எரிவாயுக் கப்பல்கள் இலங்கைக்கு வருகை
இதேவேளை, 3,800 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று எதிர்வரும் 20ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் நளிந்த குருகுலசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், 3,500 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
