இலங்கையின் மருதமுனை கடற்கரையை அண்டிய பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்கள் மற்றும் வணிக நிலையங்களை அகற்றுமாறு கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைகள் திணைக்களம் இறுதி அறிவித்தல் விடுத்துள்ளது.
திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
1981ஆம் ஆண்டின் 57ஆம் இலக்க கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைகள் சட்டம் மற்றும் அதன் திருத்தங்களின்படி, உரிய அனுமதியின்றி கடலோர வலயத்திற்குள் கட்டுமானங்கள் அல்லது வணிக நிலையங்களை அமைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
திணைக்களப் பொறியியலாளர் மற்றும் கள உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட அண்மைய ஆய்வில், மருதமுனை கடற்கரையை அண்டிய பகுதியில் முன்மொழியப்பட்ட கரையோர வலய எல்லையிலிருந்து 25 மீற்றருக்குள் உரிய சட்ட அனுமதியின்றி தற்காலிக மற்றும் நிரந்தரக் கட்டுமானங்கள் அமைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அறிவித்தல் கிடைக்கப்பெற்ற அல்லது குறித்த இடத்தில் அது ஒட்டப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள், அதாவது 2026 ஒக்டோபர் 22ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு முன்னர், சட்டவிரோதக் கட்டுமானங்களையும் அவற்றிலுள்ள பொருட்களையும் சம்பந்தப்பட்டவர்கள் தமது சொந்தச் செலவில் முழுமையாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கட்டுமானங்கள் அகற்றப்பட்ட பின்னர் கடற்கரைப் பகுதியை அதன் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டுமானங்களை அகற்றத் தவறினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. அத்துடன், சட்டவிரோதக் கட்டுமானங்கள் திணைக்களத்தினால் இடித்து அகற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அகற்றும் நடவடிக்கையின்போது ஏற்படக்கூடிய சேதங்கள் அல்லது பொருட்களின் இழப்புகளுக்கு அரசாங்கமோ திணைக்களமோ பொறுப்பேற்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானங்களை இடித்து அகற்றுவதற்கான முழுச் செலவினங்களும் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து சட்டபூர்வமாக அறவிடப்படும் எனப் பிராந்திய பொறியியலாளர் எச்சரித்துள்ளார்.
