கண்டி – யாழ்ப்பாணம் A9 வீதியின் அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகொட 7ஆம் கட்டைப் பகுதி இன்று (22) இரவு 10 மணி முதல் நாளை (23) அதிகாலை 2 மணி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (19) குறித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய கனரக வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன் காரணமாகவே குறித்த வீதிப் பகுதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
மாற்று வழிகள் அறிவிப்பு
வீதி மூடப்படும் காலப்பகுதியில் வாகன நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
1. கண்டியிலிருந்து மாத்தளை நோக்கிச் செல்லும் வாகனங்கள்:
கட்டுகஸ்தோட்டை – மடவளை – வத்தேகமை – உகுவலை – எல்வளை ஆகிய பகுதிகள் ஊடாகப் பயணித்து A9 வீதியை அடைய முடியும்.
2. மாத்தளையிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள்:
எல்வளை – உகுவலை – வத்தேகமை – மடவளை வழியாகக் கட்டுகஸ்தோட்டையை அடைந்து கண்டி நோக்கிப் பயணிக்க முடியும்.
3. இலகுரக வாகனங்கள்:
அலவத்துகொட – ஓவிஸ்ஸ – பூஜாபிட்டிய – அம்பதென்ன வழியாகக் கட்டுகஸ்தோட்டையை அடைந்து கண்டி நோக்கிப் பயணிக்க முடியும்.
வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்
குறித்த காலப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் வீதி மூடல் தொடர்பான அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்து, பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வாகன நெரிசல் மற்றும் பயணத் தாமதங்களைத் தவிர்ப்பதற்காகப் பயணத்தைத் திட்டமிட்டு மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
