சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்தில் உள்ள நாக்சு (Nagqu) பகுதியில், பாகிங் (Baqing) மாவட்டத்தை மையமாகக் கொண்டு 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் நேற்று ஒக்டோபர் 22ஆம் திகதி இரவு உள்ளூர் நேரப்படி 10.33 மணியளவில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கட்டடங்கள் அதிர்ந்ததாகவும், சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டதுடன், சில இடங்களில் கட்டடங்கள் இடிந்துள்ளதாகவும் ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அப்பகுதியில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், சேத விபரங்கள் மற்றும் மக்களின் நிலைமைகள் தொடர்பில் அதிகாரிகள் ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
