புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் ஆங்கிலப் பிரதியில், நீண்ட கூந்தல் மற்றும் பச்சை குத்தியுள்ள நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதனால், நீண்ட கூந்தல் கொண்ட பெண்களும் அவதானமாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இன்று (23) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் மோதல்கள் அதிகரித்து வருவதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்பது மக்களின் உரிமை எனத் தெரிவித்த அவர், வன்முறைகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் மட்டுமே பொலிஸார் தலையிட வேண்டும் என்றும் கூறினார். எனினும், தற்போதைய அரசாங்கம் அமைதியான பேரணிகளுக்கும் தடைகளை ஏற்படுத்துவதாக அவர் விமர்சித்தார்.
நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்குப் பதிலாக, முச்சக்கரவண்டிகள் மற்றும் பேருந்துகளில் உள்ள அலங்காரப் பொருட்களை அகற்றுவது போன்ற விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், பௌத்த மதம் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாப்பது தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பிலும் கருத்துத் தெரிவித்த அவர், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி இந்த விவகாரத்துக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
