நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக, 10 மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையைத் தொடர்ந்து நீடிக்கத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தளை, களுத்துறை, கம்பஹா, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களின் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கைகள் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மழை நிலவரம் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
