நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ரம்புக்கன – பேராதனை மற்றும் பேராதனை – கம்பளை இடையிலான ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (25) நள்ளிரவு 12 மணி முதல் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரம்புக்கன மற்றும் பேராதனை ரயில் நிலையங்களுக்கு இடையிலுள்ள கடிகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் மண்சரிவு அபாயம் தீவிரமடைந்துள்ளதுடன், ரயில் பாதையில் மண் சரிந்து விழுந்து வருவதும் இந்தத் தீர்மானத்திற்குக் காரணமாகும்.
குறித்த ரயில் பாதையைச் சீரமைத்து போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்காக சனிக்கிழமை (24) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (25) ஆகிய தினங்களில் அவசர புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும், அப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மண்சரிவு அபாயம் இன்னும் நீங்கவில்லை எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, ரயில்களைப் பாதுகாப்பாக இயக்குவதற்கான நிலை உறுதிப்படுத்தப்படும் வரை குறித்த வழித்தடங்களிலான அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டிருக்கும்.
இக்காலப்பகுதியில் பயணிப்பதற்காக முன்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களுக்குப் பணம் செலுத்திய பயணிகள், தாங்கள் செலுத்திய முழுத் தொகையையும் எந்தவொரு ரயில் நிலையத்திலிருந்தும் மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என ரயில்வே திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
