யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர், தபால் நிலையத்தை அதன் சொந்த இடத்தில் மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (25) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
32.09 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய தபால் நிலையக் கட்டடத்துக்கான அடிக்கல், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நாட்டப்பட்டது.

இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் காரணமாக 1990ஆம் ஆண்டு வலிகாமம் வடக்குப் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, காங்கேசன்துறை தபால் நிலையத்தின் செயற்பாடுகள் அதன் சொந்த இடத்திலிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன.
பின்னர், அப்பகுதியில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தபால் நிலையம் தனியார் கட்டடமொன்றில் தற்காலிகமாக இயங்கி வந்தது.

இந்நிலையில், காங்கேசன்துறை உப தபாலகம் அமைந்திருந்த அதே காணியில் புதிய கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் கட்டுமானப் பணிகளை எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ச. பவானந்தராஜா உள்ளிட்ட மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அரச அதிகாரிகள், பிரதேச சபைத் தவிசாளர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
