ருவன்வெலிசாயவை நினைவுச் சின்னம் எனக் குறிப்பிடுவது பௌத்த மதிப்புகளைச் சிதைக்கும் செயற்பாடு எனத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பௌத்த விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியுடன் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கத் தயார் என அறிவித்துள்ளார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ருவன்வெலிசாய என்பது வெறுமனே வரலாற்று நினைவுச் சின்னமல்ல என்றும், அது பௌத்த மக்களின் வழிபாட்டுக்கும் நம்பிக்கைக்கும் உரிய புனிதத் தலம் என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார். அதன் மத மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு கருத்துகளை வெளியிட வேண்டிய பொறுப்பு அமைச்சருக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அனுராதபுரம் புனிதப் பிரதேச அபிவிருத்தித் திட்டம் மற்றும் அதற்காக இந்தியாவிடமிருந்து கிடைத்ததாகக் கூறப்படும் 7.7 பில்லியன் ரூபா நிதி தொடர்பிலும் பல கேள்விகள் எழுந்துள்ளதாக அவர் கூறினார். திட்டத்தின் நோக்கம் மற்றும் நிதி பயன்படுத்தப்படும் விதம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், ருவன்வெலிசாய புனித வளாகத்துக்குள் காலணிகளுடன் செல்வது தொடர்பான சம்பவங்களையும் அவர் விமர்சித்தார். பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் புனிதத் தலத்தின் மரபுகளுக்கு மதிப்பளித்து காலணிகளைக் கழற்றிவிட்டுச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த விவகாரங்கள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை ஆதாரங்களுடன் முன்வைக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட விமல் வீரவன்ச, எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சர் ஹினிதும சுனில் செனவியுடன் நேரடி தொலைக்காட்சி விவாதத்தை நடத்துவதற்கு அழைப்பு விடுத்தார். இதற்கான தொலைக்காட்சி ஊடகத்தையும் தெரிவுசெய்யலாம் என அவர் தெரிவித்தார்.
