இலங்கையின் கால்பந்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், விளையாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் அதன் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, இலங்கைப் பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடியுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவுடன் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தக் குழுவில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவர் பிரியந்த ஏகநாயக்க மற்றும் உயர் செயல்திறன் மையத்தின் பொறுப்பாளர் பிரசன்ன ஜயலத் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமானதாக அமைந்ததாகத் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ள ஜியானி இன்ஃபான்டினோ, கால்பந்து உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஆதரவளித்தல், FIFA, இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளனம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கால்பந்தின் மீது ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் திறமையான வீரர்களுக்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இணைந்து செயற்படுவதில் தாம் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இளம் வீரர்களின் திறமைகளை வளர்ப்பதில் இளையோர் கால்பந்து போட்டிகளின் முக்கியத்துவத்தையும் FIFA தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
FIFA U-15 உலகக் கிண்ணப் போட்டிகள் மற்றும் கால்பந்து விழா போன்ற நிகழ்வுகள், இளம் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் சர்வதேச அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய நிகழ்வுகள் மூலம் சிறுவர்கள் தங்களது கால்பந்துத் திறன்களை மேம்படுத்துவதுடன், சர்வதேச அரங்கில் தமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் பெருமையையும் அனுபவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
