மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் வழக்கு
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் மற்றும் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவை இதில் உள்ளடங்குகின்றன.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள்
இந்த வழக்கு இன்று திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
பிள்ளையான் காணொளித் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, மூவரையும் நவம்பர் 10ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
