கடவத்தை – மஹகடே சந்திப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவரும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தினால் பொலிஸாரின் உத்தரவை மீறித் தப்பிச் செல்ல முயன்றதாகத் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் மஹகடே சந்திப் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், முச்சக்கரவண்டி ஒன்றை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர். எனினும், அதனைப் பொருட்படுத்தாமல் முச்சக்கரவண்டி தொடர்ந்து பயணித்துள்ளது.
இதையடுத்து, முச்சக்கரவண்டியைத் துரத்திச் சென்ற பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த 16 வயதுடைய இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சற்றுத் தீவிரமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மற்றைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
