அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) 2004ஆம் ஆண்டு விண்ணில் செலுத்திய ‘ஸ்விப்ட்’ (Swift) விண்வெளித் தொலைநோக்கி, பூமியின் வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழையத் தயாராகி வருகிறது.
சுமார் 22 ஆண்டுகளாக விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொண்ட இந்தத் தொலைநோக்கி, காமா கதிர் வெடிப்புகள், சூப்பர்நோவாக்கள் உள்ளிட்ட பிரபஞ்ச நிகழ்வுகளை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டது.
அண்மைக்காலமாக அதிகரித்த சூரியச் செயல்பாடுகளால் பூமியின் மேல் வளிமண்டலம் விரிவடைந்து, செயற்கைக்கோள்கள் மீது ஏற்படும் வளிமண்டல இழுவிசை அதிகரித்துள்ளது. இதனால் ஸ்விப்ட் தொலைநோக்கியின் சுற்றுப்பாதை வேகமாகக் குறைந்துள்ளது.
இதன் சுற்றுப்பாதையை உயர்த்தி, அதன் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. இதையடுத்து, ஒக்டோபர் 20ஆம் திகதி இறுதி ஆய்வை மேற்கொண்ட தொலைநோக்கியின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.
சுமார் 1.5 தொன் எடையுள்ள இந்தத் தொலைநோக்கி நவம்பர் முதல் வாரத்தில் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டலத்தில் நுழையும்போது அதன் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சிதைந்துவிடும் எனினும், அடர்த்தியான சில உலோகப் பாகங்கள் பூமியை வந்தடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் சிதைவுகள் பெரும்பாலும் கடலில் விழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஆப்பிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, தென்கிழக்காசியா மற்றும் மத்திய, தென் அமெரிக்காவின் சில பகுதிகளும் அதன் சுற்றுப்பாதை எல்லைக்குள் உள்ளன.
விண்வெளித் தொலைநோக்கியின் பூமிக்குள் மீள் நுழையும் நேரமும் இடமும் இன்னும் துல்லியமாக உறுதிப்படுத்தப்படவில்லை. அமெரிக்க விண்வெளிப் படை உள்ளிட்ட அமைப்புகள் அதன் பயணப் பாதையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
எனினும், இதன் சிதைவுகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழும் அபாயம் மிகக் குறைவு என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
