நாட்டில் அதிகரித்து வரும் மழைவீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு, நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சுகாதார அமைச்சின் அறிவித்தலுக்கமைய தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டின் 74 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கி நடைபெறவுள்ள இந்நடவடிக்கையில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டம், பொலிஸார், முப்படையினர் மற்றும் தன்னார்வ அமைப்புகளும் இணைந்துகொள்ளவுள்ளன.
கடந்த காலங்களில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமை, குடம்பி ஆய்வு முடிவுகள் மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாக டெங்கு பரவும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் நவம்பர் 2ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்த நடவடிக்கை, சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
