மகியங்கனை பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காகப் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் தோல்கள் மற்றும் உடற்பாகங்களைப் பெருமளவில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கிராந்துருகோட்டை காட்டு யானைகள் முகாமைத்துவப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது நான்கு யானைத் தந்தங்கள், யானையின் முதுகெலும்புத் துண்டுகள், நூற்றுக்கணக்கான யானை வால் மயிர்கள், முள்ளம்பன்றி முட்கள், சிறுத்தைத் தோல் துண்டுகள், முதலைத் தோல், இரண்டு மரநாய் தோல்கள், இரண்டு மான் தோல்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்கு உடற்பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், 1,000க்கும் அதிகமான மயில் இறகுகள், சிறுத்தையின் மண்டையோடு, மரநாய் தலை மற்றும் இறைச்சி, கரடி எண்ணெய் மற்றும் பன்றி எண்ணெய் அடங்கிய போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மகியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
