பண்டாரவளை மற்றும் ஹீலோயா தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இன்று (04) அதிகாலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மலையகப் பாதையிலான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
162/54 மைல்கல் பகுதிக்கு அருகில் தொடருந்து பாதையில் பெருமளவிலான மண்ணும் பாறைகளும் சரிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
சரிந்த மண் மற்றும் பாறைகளை அகற்றி தொடருந்து பாதையைச் சீரமைக்க சுமார் ஆறு மணித்தியாலங்கள் தேவைப்படும் என நானுஓயா தொடருந்து நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால், நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த பொடி மெனிகே தொடருந்து இன்று பண்டாரவளை வரை மட்டுமே இயக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதை சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை பதுளை – நானுஓயா இடையிலான தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் அகற்றப்பட்ட பின்னர் வழமையான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
