பொலிஸ் காவலில் இடம்பெறும் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொலிஸாருக்கு மேலும் அதிகாரங்களை வழங்குவது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (5) நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவை மக்களின் ஜனநாயக உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
கடந்த அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாகப் புதிய சட்டமொன்றைக் கொண்டுவர முயன்றபோது எதிர்ப்புத் தெரிவித்த தற்போதைய ஆட்சியாளர்கள், இன்று அதேபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளைப் பயங்கரவாத நடவடிக்கைகளாகக் கருதும் போக்கு காணப்படுவதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம் பொலிஸாருக்கு வரையறையற்ற அதிகாரங்களை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
பொலிஸாருக்கு இவ்வாறு கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டால் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார எச்சரித்தார்.
