அரசாங்கத்துக்குச் சொந்தமான பெருந்தோட்டக் காணிகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு முன்னர், அங்கு தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மலையக மக்களின் காணி உரிமை மற்றும் எதிர்கால வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசுக்குச் சொந்தமான JEDB, SLSPC மற்றும் எல்கடுவை பெருந்தோட்ட நிறுவனம் ஆகியவற்றின் கீழுள்ள காணிகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அங்கு வாழும் மக்களுடன் முறையான கலந்துரையாடல்கள் நடத்தப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.
குறித்த காணிகள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னர், அங்கு வாழும் மக்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் உரிய தகவல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சுமார் 7,422 தொழிலாளர்கள் குறித்த பெருந்தோட்டப் பகுதிகளில் பணியாற்றி வருவதாகவும், அவர்களில் சிலர் முறையான தொழிலாளர் பதிவுகளின்றி வேலை செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
JEDB மற்றும் எல்கடுவை பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களின் EPF, ETF பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்காக அரசாங்கம் 4,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கியதாகவும், அதில் 1,300 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிதி ஒதுக்கீட்டை முன்னர் வரவேற்றிருந்த போதிலும், தற்போது பெருந்தோட்டக் காணிகளை முழுமையாகத் தனியார் தரப்பினரிடம் ஒப்படைக்கும் நோக்கம் இருப்பதாகத் தெரியவருவதாக ஜீவன் தொண்டமான் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், சுமார் மூன்று இலட்சம் ஏக்கர் காணிகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்க அரசாங்கத்தால் முடியும் என்றால், அதில் குறைந்தது 10 சதவீதக் காணிகளையாவது அங்கு வாழும் மக்களுக்கு வழங்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, மலையக மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான காணிகளை வழங்குவதுடன், விவசாயம் மற்றும் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கான காணிகளையும் ஒதுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் பங்களாக்கள், தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய வளங்களைத் தனித்தனியாக அடையாளப்படுத்தி சுற்றுலாத்துறை மற்றும் தொழிற்துறை முதலீடுகளுக்காகத் தனியாருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றால், அங்கு வாழும் மக்களுக்கான காணிகளையும் தனியாக ஒதுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
மேலும், பெருந்தோட்டக் காணிகள் முழுமையாகத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டால், அங்கு வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேள்வி எழுப்புவதற்கும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான வாய்ப்புகள் குறையக்கூடும் என எச்சரித்தார்.
கொட்டகலை, ஹட்டன், பொகவந்தலாவை உள்ளிட்ட மலையகப் பகுதிகளிலும், கண்டி, மாத்தளை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களிலும் பெருந்தோட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சார்ந்த அரசியல் பிரச்சினை அல்ல என்றும், மலையக மக்களின் அடையாளம், உரிமை மற்றும் எதிர்காலத்துடன் தொடர்புடைய முக்கியமான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக, JEDB, SLSPC மற்றும் எல்கடுவை பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழுள்ள காணிகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்தாலும், 2042ஆம் ஆண்டில் முடிவடைய வேண்டிய ஒப்பந்தத்தைத் தனியார் தரப்பினருக்குச் சாதகமாக மேலும் நீடிக்க வேண்டாம் எனவும் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.
மலையக மக்களின் காணி உரிமை, வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலத்தை உறுதிப்படுத்திய பின்னரே பெருந்தோட்டக் காணிகள் தொடர்பான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்பதே தனது பிரதான கோரிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.
