சூரிய சக்தி மின் கட்டமைப்புகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்பில் மாபெரும் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்தி முன்னணியின் தலைவர் எச்.ஜீ. ருவன் சாமர தெரிவித்துள்ளார்.
கூரை மீது சூரிய சக்தி மின் கட்டமைப்புகளை அமைப்பது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சூரிய சக்தி மின்சார உற்பத்தியானது நாட்டின் மின்கட்டணங்களைக் குறைப்பதற்கான முக்கிய மாற்றுவழியாக இருந்தும், அதற்கான வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், சாதாரண மக்கள் தமது வீடுகளில் சூரிய சக்தி மின் கட்டமைப்புகளை நிறுவுவதற்கு மின்சாரக் கட்டமைப்பில் இடமில்லை எனக் கூறி அனுமதி மறுக்கப்படுவதாகவும், சூரிய சக்தி மற்றும் மின்கல சேமிப்பு கட்டமைப்புகளுக்கு அதிக வரிகள் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, 350 மெகாவோட் கொள்ளளவு கொண்ட டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் தொடர்பில் கொள்வனவு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கான கொள்ளளவுக் கட்டணங்களைப் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் செலுத்த வேண்டிய நிலை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் வழங்கிய மின்கட்டணக் குறைப்பு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், சூரிய சக்தித் துறையில் நடைமுறையிலுள்ள சில ஒப்பந்தங்களை இரத்துச் செய்யத் திட்டமிடப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எனவே, மின்கட்டண உயர்வைத் தடுத்து நிறுத்தவும், சூரிய சக்தித் துறையினரின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில் சூரிய சக்தி மின் கட்டமைப்பு உரிமையாளர்கள், மின்நுகர்வோர் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
