செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணியாளர்களைப் பணிநீக்கம் செய்வதைத் தற்காலிகமாகத் தடை செய்யக் கோரி மெட்டா நிறுவனத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மெட்டா நிறுவனம், ‘Metamate’ போன்ற செயற்கை நுண்ணறிவு அமைப்புகளைப் பயன்படுத்தி பணியாளர்களின் உற்பத்தித்திறனைக் கண்காணித்து வருவதாகவும், அதன் அடிப்படையில் பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாகவும் 26 பணியாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
குறிப்பாக, சுகயீன விடுமுறை அல்லது மகப்பேறு விடுமுறையில் இருந்த பணியாளர்களின் உற்பத்தித்திறன் குறைவாகக் கணக்கிடப்பட்டதால், அவர்கள் தவறாகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் வாதிட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த கலிபோர்னியாவின் ஓக்லாந்து மாவட்ட நீதிபதி வில்லியம் ஓரிச், பணிநீக்கத்தைத் தடுக்கத் தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
இந்தப் பணிநீக்க விவகாரத்தை தனிப்பட்ட முறை மூலமாகத் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மெட்டா நிறுவனம் மறுத்துள்ளது. பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யும் முடிவுகள் செயற்கை நுண்ணறிவால் எடுக்கப்படவில்லை என்றும், மனிதர்களால் மட்டுமே எடுக்கப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
