பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமிந்த விஜேசிறி உள்ளிட்ட மூவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று (28) தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.
பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் சாமிந்த விஜேசிறி மற்றும் அவரது சாரதி பந்துல ரத்நாயக்க ஆகியோர் நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகவும், அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ரசிக்க கருணாதிலக்க மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சாரதி பந்துல ரத்நாயக்க உயிரிழந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளில் பண்டாரவளை நகர சுற்றுவட்டப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாமிந்த விஜேசிறி உள்ளிட்ட குழுவினர் ஜீப் வாகனங்களில் பயணித்தபோது, அவரது ஜீப் வாகனத்தை பொலிஸ் ஜீப் ஒன்று முந்திச் சென்றமை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தகராறு பின்னர் மோதலாக மாறியதாக வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
பொலிஸ் ஜீப் வாகனத்தின் பயணத்தை தடுத்து நிறுத்திய பின்னர், அதில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் மேற்கொண்டு காயப்படுத்தியதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
