பொரலஸ்கமுவை – பெல்லன்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (ஜூலை 25) பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்லன்வில பகுதியில் குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை நவகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் அன்றிரவே ரணால பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 6.6 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 28 மற்றும் 37 வயதுடைய பக்கமூன பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
