உலகின் மதிப்புமிக்க உணவு மற்றும் பான விருது திட்டங்களில் ஒன்றான Great Taste Awards விருதுகளில் மூன்று இலங்கை நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்றுள்ளன.
Gralgo From Ceylon, Planet’s Finest மற்றும் Ceylbee International ஆகிய நிறுவனங்களே இவ்வாறு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
இந்நிறுவனங்கள் மூன்றும் பிரித்தானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயல்படும் UK Trade Partnerships Programme திட்டத்தின் ஊடாக ஆதரவு பெற்ற நிறுவனங்களாகும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இவ்விருது, உயர்தரமான இலங்கை உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்லும் நிறுவனங்களின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Great Taste Awards விருதுகள், நிறுவனப் பெயர், பொதியிடல் அல்லது விலை ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல், சுவையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கடுமையான மதிப்பீட்டு முறையில் வழங்கப்படுகின்றன.
இம்முறை பங்கேற்ற தயாரிப்புகளில் மூன்றில் ஒரு பகுதியுக்கும் குறைவானவையே நட்சத்திர விருதுகளைப் பெற்றுள்ள நிலையில், இலங்கை நிறுவனங்களின் இந்த சாதனை சர்வதேச சந்தையில் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
