இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, முன்னணி துடுப்பாட்ட வீரர்களான பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரின் காயம் காரணமாக இலங்கை அணி பாரிய தெரிவு சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
காயங்களிலிருந்து மீண்டு வரும் பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் போட்டியில் நிஸ்ஸங்க விளையாடமாட்டார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், குசல் மெண்டிஸ் முழுத் தொடரிலிருந்தும் விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிஸ்ஸங்கவுக்குப் பதிலாக தொடக்க ஆட்டக்காரராக நிஷான் மதுஷ்க களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.
இவர் இந்தியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் 66 ஓட்டங்களைப் பெற்று தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, குசல் மெண்டிஸுக்குப் பதிலாக விக்கெட் காப்பாளராக யாரை நியமிப்பது என்பதில் இலங்கை அணிக்கு பெரும் குழப்பம் நிலவுகிறது.
விக்கெட் காப்பாளர்களாக சதீர சமரவிக்ரம, அஞ்சன பண்டார மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் பரிசீலனையில் உள்ளனர்.
லஹிரு உதார அல்லது தினேஷ் சந்திமால் ஆகியோரை விக்கெட் காப்பாளர்களாகப் பயன்படுத்துவது குறித்தும் யோசிக்கப்பட்டாலும், அதற்கான சாத்தியக்கூறு குறைவாகவே உள்ளது.
இலங்கை மற்றும் இந்தியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
