ரங்கன ஹேரத்தின் ஓய்வுக்குப் பிறகு இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சுப் பலம் கணிசமாகக் குறைந்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ரங்கன ஹேரத் ஏற்படுத்திய அதே அளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் தற்போது இலங்கை அணியில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த அஸ்வின், ரங்கன ஹேரத் தொடர்ந்து விளையாடியிருந்தால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இலங்கைக்கு வெற்றி பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னணி இடதுகை சுழற்பந்து வீச்சாளரான பிரபாத் ஜெயசூரிய குறித்து கருத்து தெரிவித்த அவர், அவர் சற்று மெதுவாகப் பந்துவீசுவதால் இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு எதிராக எவ்வளவு அச்சுறுத்தலாக இருப்பார் என்பதில் சந்தேகம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ரமேஷ் மெண்டிஸ் மற்றும் நிஷான் பீரிஸ் ஆகியோரையும் சுட்டிக்காட்டிய அஸ்வின், இலங்கை ‘ஏ’ அணிக்காக விளையாடியபோது தன்னை கவர்ந்த மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் இருந்ததாகவும், அவரது பெயரை தற்போது நினைவுகூர முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆகஸ்ட் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் கலவையே இந்தியாவுக்கு எதிரான அணியின் சவாலை தீர்மானிக்கும் எனவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
