முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சன்திக ஹத்துருசிங்கவின் ஒப்பந்தத்தை இரத்து செய்தமை தொடர்பான நீண்டகால சட்டப் பிரச்சினைக்கு, 1,64,000 அமெரிக்க டொலர் நட்டஈடு வழங்கி இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தீர்வு கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தீர்வையடுத்து, சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுக்கான சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றத்தில் (CAS) தொடரப்பட்டிருந்த வழக்கைத் திரும்பப் பெற ஹத்துருசிங்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பத்தில் 5 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியிருந்த அவர், பின்னர் 4,50,000 டொலர் கோரி புதிய வழக்கைத் தொடர்ந்திருந்தார். இறுதியில், 50 சதவீத வரிப் பொறுப்பு உட்பட 2,00,000 டொலர் தீர்வுக்கு இணக்கம் காணப்பட்ட நிலையில், SLC-யிடமிருந்து 1,64,000 டொலரைப் பெற்று வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2017 டிசம்பர் முதல் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட ஹத்துருசிங்கவின் வழிகாட்டலில் அணி விளையாடிய 67 சர்வதேசப் போட்டிகளில் 24 வெற்றிகளையும் 38 தோல்விகளையும் பதிவு செய்திருந்தது.
அத்துடன், அணியினரிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தியமை மற்றும் வீரர்களை போதியளவு தயார்படுத்தத் தவறியமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சட்டச் செலவுகளைத் தவிர்ப்பதற்காக நீதிமன்றத்திற்கு வெளியே இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்துக்கொள்ளுமாறு அரச நிறுவனங்கள் பற்றிய குழுவான COPE பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
