காலியில் தம்பதியினர் மீது வீசப்பட்ட அசிட் தாக்குதலில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கணவன் உயிரிழந்துள்ளார். பிட்டிகல, நியாகம, உடகங்வத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு செல்லத் தயாரான போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான காரியவசம மாஜுவான கமகே நுவன் சுரங்க டயாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த முதலாம் திகதி இந்தத் தம்பதியினர் மீது நடத்தப்பட்ட அசிட் தாக்குதலில் பலத்த காயமடைந்த, உயிரிழந்தவரின் மனைவியான குமாரி எதித்சிங்க கொடித்துவக்கு என்ற 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அசிட் தாக்குதலுக்கு இலக்கையான இந்தத் தம்பதி, தமது வீட்டிலிருந்து பிட்டிகல பிரதேசத்திலுள்ள நண்பரின் வீட்டிற்கு கடந்த முதலாம் திகதி இரவில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அந்த வீட்டில் சிறிது நேரம் தங்கியிருந்துவிட்டு தமது வீட்டிற்குச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஏற முயன்றபோதே இரவு 10 மணியளவில் அவர்கள் மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அசிட் தாக்குதலில் காயமடைந்த தம்பதியினர் முதலில் நியாகம வைத்தியசாலைக்கும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்ட நிலையில் கணவன் நேற்று உயிரிழந்துள்ளார்.
தம்பதியினர் மீது அசிட் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை இருவர் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய சில சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பியோடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தனிப்பட்ட பணத் தகராறே இந்த அசிட் தாக்குதலுக்குக் காரணம் என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
