இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு இலங்கையின் முன்னாள் சகலதுறை வீரர் ஃபர்வீஸ் மஹ்ரூஃப் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை ஏ அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றிருந்தாலும், இலங்கையின் சுழற்பந்து வீச்சை இந்திய அணி இலகுவாகக் கருதக்கூடாது என மஹ்ரூஃப் தெரிவித்துள்ளார்.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை அணியின் பிரதான ஆயுதமாக பிரபாத் ஜயசூரிய விளங்குவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி மைதானத்தில் வீசும் குறுக்குக் காற்றைப் பயன்படுத்தி பந்தை சிறப்பாகச் சுழலச் செய்வது குறித்து பிரபாத் ஜயசூரிய நன்கு அறிந்துள்ளதாகவும் மஹ்ரூஃப் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் முதன்முறையாக காலி மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள நிலையில், அங்குள்ள காற்றின் தன்மையையும் ஜயசூரியவின் துல்லியமான நீண்டநேரப் பந்துவீச்சையும் எதிர்கொள்வது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
காலி மைதானத்தில் இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிரபாத் ஜயசூரிய 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
