நுரைச்சோலை – பனியடிய பகுதியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 1,464 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை (13) வடமேற்கு கடற்படை கட்டளையின் ‘விஜய’ கடற்படைக் கப்பல் பிரிவிற்கு கிடைத்த நம்பகமான தகவலுக்கு அமைவாக, நுரைச்சோலை பொலிஸாருடன் இணைந்து பனியடிய பகுதியில் இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, அப்பகுதியில் எவரும் இல்லாத நிலையில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றில் சோதனையிடப்பட்டதில், சந்தேகத்திற்கு இடமான 38 பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டு, மேலதிக கடத்தலுக்காகத் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,464 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதியே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
