கிராம உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இதுவரை உரிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதைக் கண்டித்து, வருகின்ற 24 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் கொழும்பில் ஒன்றுகூடிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த போராட்டத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சந்தர்ப்பம் கோரப்படவுள்ளதுடன், கிராம உத்தியோகத்தர்களின் கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
தற்போதைய அரசாங்கம் கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை வழங்கும் என கடந்த 2 வருட காலமாக எதிர்பார்த்திருந்த போதிலும், அவை எதுவும் நிறைவேற்றப்படாத காரணத்தினாலேயே கடந்த ஆகஸ்ட் மாதம் 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் நோய் விடுமுறை போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது இலங்கையில் மொத்தம் 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் காணப்படும் நிலையில், 12,500 கிராம உத்தியோகத்தர்களே சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கிராம உத்தியோகத்தர்களின் நீண்டகாலத் தொழில்சார் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை அரசாங்கம் மேலும் தாமதப்படுத்தினாலோ அல்லது இழுத்தடித்தாலோ, நாட்டின் அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் தங்களின் சகல அரசாங்கப் பொறுப்புகள் மற்றும் கடமைகளிலிருந்தும் முழுமையாக விலகி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.
