இலங்கையில் மாற்றுத்திறனாளிகள் தங்கியிருக்கும் பராமரிப்பு மையங்களில் மூன்றில் ஒரு பங்கு மாத்திரமே முறையாகப் பதிவுசெய்யப்பட்டு, அரசின் கண்காணிப்புக்கு கீழ் இயங்குகின்றன. தனியார் துறையினரால் நடாத்தப்படும் மூன்றில் இரண்டு மையங்கள் எந்த அடிப்படையில் இயங்குகின்றன என மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் உபகுழு இலங்கையிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் உபகுழுவின் இலங்கை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (14) ஜெனிவாவில் நடைபெற்றது. அங்கு இலங்கை தொடர்பில் கருத்துரைத்த மீளாய்வுக்குழுவின் தலைவர் இரோஷி தமோன் உள்ளிட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் வருமாறு:
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பான மீளாய்வு நிறைவுசெய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக இலங்கையினால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் கொள்கைகளையும், அதுசார்ந்த கட்டமைப்புக்கள் நிறுவப்பட்டமையையும் வரவேற்கின்றோம்.
அதேவேளை மாற்றுத்திறனாளிகள் தங்கும் பராமரிப்பு மையங்களின் கண்காணிப்புசார் குறைபாடுகள் மற்றும் சைகை மொழி பரவல் என்பன தொடர்பான பல்வேறு கேள்விகள் உள்ளன.
இவ்வாண்டு ஜுன் மாதம் இலங்கையிலுள்ள குடியிருப்புப் பராமரிப்பு மையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதுடன், அவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரேனும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
அந்த மையத்தில் தங்கியிருந்த 70 பேரில் சுமார் 62 பேர் உளவியல் மற்றும் உடலியல் சார்ந்த மாற்றுத்திறனாளிகளாவர். இவ்வாறான மையங்களில் மூன்றில் ஒரு பங்கானவை மாத்திரமே முறையாகப் பதிவுசெய்யப்பட்டு, அரசின் கண்காணிப்புக்கு உள்ளாகின்றன.
இவற்றுக்கு அப்பால் தனியார் துறையினரால் நடாத்தப்படும் மூன்றில் இரண்டு பங்கான மையங்கள் எவ்வாறு இயங்குகின்றன? இந்த மையங்களில் பாரதூரமான அசம்பாவிதற்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு எவ்வாறான கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன?
அதேவேளை சைகை மொழியை ஊக்குவிப்பதற்கு இலங்கை முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளைப் பெரிதும் வரவேற்கின்றோம். அம்முயற்சிகளின் விளைவாக இலங்கையின் அரச கட்டமைப்புக்களில் 10 சைகை மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர்.
இதனுடன் இணைந்ததாக சைகை மொழியை உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிப்பதற்கு எவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதையும், தற்போது வரைவு மட்டத்தில் உள்ள சைகை மொழி சட்டமூலம் நிறைவேற்றப்படுமா என்பதையும் இலங்கை தெளிவுபடுத்தவேண்டும் என வலியுறுத்தினர்.
