தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே பல தசாப்தங்களாகத் தொடரும் போரை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துமாறு தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் (Lee Jae Myung) வட கொரியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கொரிய தீபகற்பம் ஜப்பானிய ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டதை நினைவுகூரும் “விடுதலை தினத்தை” முன்னிட்டு உரையாற்றிய போதே தென் கொரிய ஜனாதிபதி இந்த முன்மொழிவை வெளியிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்குப் பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை முன்மொழிந்த அவர், வடகொரியாவின் அணுஆயுதத் திட்டங்களை நிறுத்துவதற்கான நடைமுறை வழிகள் குறித்து கலந்துரையாடத் தயார் என்றும் தெரிவித்தார்.
எனினும், தென் கொரியாவின் இந்தப் பேச்சுவார்த்தை அழைப்பு தொடர்பில் வட கொரியா இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1953 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் மட்டுமே கையெழுத்திடப்பட்டதால், சட்டப்பூர்வமாக இரு நாடுகளும் இன்னும் யுத்த நிலையிலேயே உள்ளன.
வடகொரியா தொடர்ந்து அணுஆயுதச் சோதனைகளை நடத்தி வருவதுடன், தென் கொரியாவைத் தனது முதன்மை எதிரியாகக் கருதி அரசியலமைப்பிலும் மாற்றங்களைச் செய்துள்ளது.
