நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 2027ஆம் ஆண்டில் பாடசாலை கட்டமைப்புக்கு 23,000 ஆசிரியர்களை புதிதாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 4,000 ஆசிரியர்கள் தேசிய பாடசாலைகளுக்கும், ஏனைய 19,000 ஆசிரியர்கள் மாகாண பாடசாலைகளுக்கும் நியமிக்கப்படவுள்ளனர் என பிரதமரும் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தேவையான பரீட்சைகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக மாகாண மட்டத்தில் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.
அத்துடன் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்குத் தேவையான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் மலையக மக்களுக்காக தனியான கல்வியியல் கல்லூரியொன்றை அமைப்பது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
அத்துடன் முன்பள்ளிகளின் ஒழுங்குமுறை மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
