விவசாயிகளிடம் இருந்து நிர்ணய விலையில் நெல்லை கொள்வனவு செய்யும் வகையில் சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபா வரையில் வட்டியில்லா கடனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
விவசாயிகளிடம் ஒரு தொகை நெல்லை களஞ்சியப்படுத்தி வைத்திருக்கக்கூடிய வகையிலும், அறுவடையை அதிகரிக்க தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம் என கமத்தொழில்,கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ.லால்காந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுக்கான குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு திறைசேரி ஊடாக கடன் உதவிகளை பெற்றுக்கொடுக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள தொகையில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக அந்த கடன் உதவி வழங்கப்படவுள்ளது. விவசாயிகளிடம் இருந்து நியாயமான விலைக்கு நெல் விற்பனை சபையினால் மட்டும் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியாது. இதற்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தையே முன்னெடுக்கின்றோம்.
120 ரூபாவுக்கு நாடு அரிசிக்கான நெல்லும், 130 ரூபாவுக்கு சம்பா நெல்லும் 140 ரூபாவுக்கு கிரிசம்பா நெல்லும் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. எவ்வாறாயினும் நெல் விற்பனை சபையினால் குறித்த விலையில் நெல்லை பெற்றுக்கொள்வதற்கான போதுமான பொறிமுறை கிடையாது. கடந்த காலங்களில் முகம்கொடுத்த பல்வேறு பிரச்சினைகளால் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை பெற்றுக்கொள்வதில் சிக்கல் இருந்தது. இதனால் இது தொடர்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் அவர்களுக்கு அரசாங்கத்தின் தலையீட்டில் நிதி உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபா வரையில் நிதி உதவியை வழங்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும். இந்த கடனை பெற்ற பின்னர் கொள்வனவு செய்யும் நெல்லை அரிசியாக்கி விற்று பணமாக்கி மீளச் செலுத்த முடியும்.
இதற்கு தேவையான நிதியை ஒதுக்கும் வகையிலேயே இந்த குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.பெருமளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் அரச நிர்ணய விலையில் ஏற்கனவே நெல் கொள்வனவு செய்யப்படுவதாக விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் இவை செயற்படுத்தப்பட்டாலும் சகல விவசாயிகளும் மகிழ்ச்சியடையும் பதிலை வழங்க முடியுமாக இருக்கும் என்று நம்பவில்லை. இதற்கு காரணம் ஒவ்வொரு பிரதேசங்களின் அடிப்படையில் அறுவடை அளவில் வேறுபாடுகள் உள்ளன.
இதனால் ஒரே விலையில் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் உள்ளன. இதனால் இப்போது மூன்று பொறிமுறைகள் உள்ளன. இதில் விவசாயிகளிடம் ஒரு தொகை நெல்லை களஞ்சியப்படுத்தி வைத்திருக்கக்கூடிய வகையிலும், அறுவடையை அதிகரிக்க தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.
