போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் கெஹல்பத்தர பத்மேவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசிகளில் இருந்து ஒன்பது அரசியல்வாதிகள் மற்றும் ஏழு நடிகைகள், மொடல்கள் தொடர்பான தகவல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சந்தேகநபரின் கைபேசிகளை ஆய்வு செய்தபோது, ஒன்பது அரசியல்வாதிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், ஏழு நடிகைகள் மற்றும் மொடல்கள் தொடர்பான தகவல்களும் கிடைத்துள்ளதாகவும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.
கிடைக்க பெற்ற தகவல்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். எனினும், குறித்த தகவல்களில் பெயர்கள் இடம்பெற்றுள்ளமை அல்லது அவர்களுடன் தொடர்புடைய பதிவுகள் காணப்படுவது மாத்திரம் அவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அர்த்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரிடமிருந்து எட்டு கைபேசிகள் மீட்கப்பட்டதாகவும், அவற்றில் இருந்த தரவுகள் அழிக்கப்பட்டிருந்த போதிலும் அவற்றை புலனாய்வாளர்கள் மீட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.
மீட்கப்பட்ட தரவுகளில் 8,841 தொலைபேசி அழைப்புகளின் விவரங்கள், 326000க்கும் அதிகமான புகைப்படங்கள், 1,101 ஒலிப்பதிவுகள் மற்றும் 5,039 காணொளிகள் அடங்குவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் 20 பேர் தொடர்பான தகவல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்தத் தகவல்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
