அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
தனது தந்தையை பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கியதாகக் கூறி, நபர் ஒருவர் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்குள் பதற்றமான முறையில் நடந்துகொள்ளும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.
காணொளியில் குறிப்பிடப்படும் முதியவர் திங்கட்கிழமை (24) இரவு மதுபோதையில் வீதியில் அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டமையினாலேயே, பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கைது செய்ய முற்பட்ட போது, குறித்த சந்தேகநபர் தப்பி ஓட முயன்றதாகவும், அப்போது கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயங்களே காணொளியில் இரத்தக் காயங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முதியவர் நேற்று செவ்வாய்க்கிழமை (25) பலப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், பலப்பிட்டிய மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது நீதிவான் அவரைப் பிணையில் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
