கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள புறநகர்ப் பகுதிகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு நிலையான தீர்வை வழங்கும் நோக்கில் புதிய மின்சார புகையிரத கட்டமைப்பு திட்டத்தை 2027 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் நடத்திய கலந்துரையாடல் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ள இத்திட்டத்துக்கு உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகப்பூர்வ உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டின் முற்பகுதியிலேயே ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த மின்சார புகையிரத வலையமைப்பானது கொழும்பிலிருந்து ராகம, மாகும்புர, மற்றும் பாணந்துறை ஆகிய முக்கிய வழித்தடங்களை முதன்மையாகக் கொண்டு அமையவுள்ளது. இதன்மூலம் புறநகர்ப் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி வரும் பயணிகள் 20 முதல் 30 நிமிடங்களுக்குள் தமது இலக்கை சென்றடைய முடியும்.
அத்துடன் புகையிரதங்கள் மிகக் குறுகிய கால இடைவெளியில் இயக்கப்படவும் வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தை முழுமையாக நிறைவு செய்ய 3 முதல் 4 ஆண்டுகள் வரை எடுக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் கேள்வி மனுக்கோரல்கள் கோரப்படவுள்ளன.
அத்துடன் புகையிரத நிலையங்களை நவீனமயமாக்கவும் புதிய தொழிநுட்பத்தைப் பயன்படுத்த இலங்கை புகையிரத திணைக்கள பணியாளர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் ஊடாக வீதிப் போக்குவரத்திலிருந்து பொதுமக்களை புகையிரத போக்குவரத்தை நோக்கி ஈர்த்து கொழும்பு நகரின் நாளாந்த வாகன நெரிசலை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
