நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எதிரான எந்த தீர்மானத்தையும் நான் எடுக்கபோவதில்லை. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் தவறான நிலைப்பாடு தோற்றுவிக்கப்படுகிறது. நீதியை தேடும் மற்றும் நீதியை பெற்றுக்கொள்ளும் மக்களின் எதிர்பார்ப்பை விரைவுப்படுத்துவதற்காகவே இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திருத்தத்தால் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும் பாதாளக்குழுக்களுக்கும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் இது பாதகமாக அமையலாம். நாட்டு மக்களின் நலனுக்காக எடுக்கும் எந்த தீர்மானத்தையும் ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புக்களினால் இடைநிறுத்த போவதில்லை, மீளப்பெறுவும் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நீர்கொழும்பில் நேற்று புதன்கிழமை (26) நடைபெற்ற 42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழா நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் சட்டவாட்சி கோட்பாடு சிறந்த முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை செயற்பாடுகள் ஊடாக நிரூபித்துள்ளேன். சட்டத்தின் முன் எவருக்கும் விசேட சலுகை வழங்கப்படாது. சட்டத்தை கடுமையாக செயற்படுத்தாமல் முறைமை மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
அரச சேவையை மறுசீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான அரச சேவை வினைத்திறனாக்கப்படும். எதிர்வரும் ஜனவரி மாதம் அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும். சமூக கட்டமைப்பை அச்சுறுத்தும் கறுப்பு அரக்கனாகவே போதைப்பொருள் பாவனை காணப்படுகிறது.
அரச இராச்சியத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்படும் போதைப்பொருள் எனும் கறுப்பு இராச்சியம் அரச இயந்திரத்தின் ஒரு சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது.போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குழு செயற்பாடுகளை முழுமையாக இல்லாதொழிப்பேன். விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்கால தலைமுறைக்காக இதனை செய்ய வேண்டும்.
போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதாளக் குழுவின் செயற்பாடுகளுக்கு கடந்த காலங்களில் அரச அனுசரணை வழங்கப்பட்டது. நீர்கொழும்பு மக்கள் அதனை நன்கு அறிவார்கள். போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுக்களை அழிப்பதற்கு முப்படைகளையும், அரச அதிகாரத்தையும் முழுமையாக பயன்படுத்துவேன்.
நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எதிரான எந்த தீர்மானத்தையும் நான் எடுக்கபோவதில்லை. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் தவறான நிலைப்பாடு தோற்றுவிக்கப்படுகிறது. நீதியை தேடும் மற்றும் நீதியை பெற்றுக்கொள்ளும் மக்களின் எதிர்பார்ப்பை விரைவுப்படுத்துவதற்காகவே இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தால் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும் பாதாளக்குழுக்களுக்கும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் இது பாதகமாக அமையலாம்.
நீதியை தேடும் மற்றும் நீதியை பெறும் பொறிமுறையில் பல பிரச்சினைகள் காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு சம்பவத்துக்கு 2026 ஆம் ஆண்டு தீர்ப்பு கிடைப்பதாயின் நீதியின் மீதான மக்களின் நம்பிக்கை வலுவற்றதாகும். ஆகவே நீதி கிடைப்பனவை விரைவுப்படுத்துவதற்காகவே நீதித்துறை கட்டமைப்பை மறுசீரமைக்கப்படவுள்ளது.
நாட்டு மக்களின் நலனுக்காக எடுக்கும் எந்த தீர்மானத்தையும் ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புக்களினாலும் இடைநிறுத்த போவதில்லை. மீளப்பெறுவும் போவதில்லை. தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் சகல தரப்பிலும் கலந்துரையாடியுள்ளோம். தீர்மானம் எடுத்ததன் பின்னர் அந்த தீர்மானத்தை மீளப்பெற போவதில்லை என குறிப்பிட்டார்.
