கிண்ணியா பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட கண்டல்காடு, மஜீத் நகர் கிராமசேவகர் பிரிவிலுள்ள கல்லடி வெட்டுவான் ஆற்றுப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘இடிமண்துறை’ பகுதிக்கான போக்குவரத்துப் பாதை தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டு மக்களிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) கையளிக்கப்பட்டுள்ளது.
சுமார் 100 வருடங்களுக்கும் மேலாக, சின்ன கிண்ணியா, பைசல் நகர், இடிமன், குட்டிக்கராஜ், பூவரசன் தீவு, சமா வச்ச தீவு, நெடுந்தீவு மற்றும் மகளாய், சின்ன மகாமாரூ போன்ற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது அன்றாடப் போக்குவரத்திற்காக இத்துறைமுகப் பாதையையே நம்பியுள்ளனர்.
ஆரம்ப காலத்தில் மாட்டு வண்டிகள் மூலமும், பின்னர் தற்காலிக மின் கம்பங்கள் வழியேயும் ஆபத்தான முறையில் கடந்து வந்த மக்கள், வெள்ளப் பெருக்குக் காலங்களில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
நீண்டகாலமாக பலதரப்பட்ட அரச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகள் நடந்தேராத போதிலும் , கிண்ணியா பிரதேச சபைக்கு விடுக்கப்பட கோரிக்கை அதிரடியாக கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தலைமையில், வட்டார உறுப்பினர்களான எம்.ஏ.அப்துல் ஹாதி,எம்.யூ.சித்திக் பூவரசன் தீவு விவசாய சம்மேளன நிர்வாகத்தினர் மற்றும் ஊர்ப் பொதுமக்களின் பங்களிப்புடன், பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் (JCB இயந்திரங்கள் மூலம் சீரமைப்புப் பணிகள் விரைவாக நிறைவு செய்யப்பட்டன.
இதன் மூலம் நடைபாதை, மிதிவண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தற்காலிகமாகப் பயணிக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. இப்பாதையானது அப்பகுதி மக்களின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, சேனைப் பயிர்ச்செய்கை, மீன்பிடி, விறகு சேகரிப்பு மற்றும் மண் அகழ்வு போன்ற வாழ்வாதாரத் தேவைகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் துறைசார் நிறுவனங்களின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்று, நிரந்தரப் பாலம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
