இலங்கைக் கடல் எல்லையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் நாட்டின் கடல் சூழலுக்கும், பாதிக்கப்பட்ட சுமார் 19,000 மீனவக் குடும்பங்களுக்கும் ஏற்பட்ட சேதங்களுக்கு கப்பல் நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய மிகப்பெரிய இழப்பீட்டுத் தொகை இதுவரை அரச திறைச்சேரிக்கு சென்றடையவில்லை என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தின் காரணமாக இலங்கை அரசாங்கம் இழப்பீட்டை வசூலிக்கத் தவறியது குறித்து இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் திங்கட்கிழமை (31) முறைப்பாடொன்றை அளித்துள்ளனர்,
அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இலங்கை அரசாங்கத்துக்கு முதற்கட்டமாக 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பை வழங்கியிருந்தது.
இந்தத் தொகையை 2026 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்திற்குள் குறிப்பிட்ட காலத்துக்குள் தவணை முறையில் செலுத்தி முடிக்க வேண்டும் என்றும், இழப்பீடுகளைத் தொடர்ந்து வசூலிக்க பிரத்யேக ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணைகளைத் தொடர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்த பின்னரும் கூட, கப்பல் நிறுவனத்திடமிருந்து இதுவரை வெறும் 1 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமே பெறப்பட்டுள்ளது.
எஞ்சிய 999 மில்லியன் அமெரிக்க டொலர் அரசாங்கத்துக்குக் கிடைக்காமல் போயிருப்பது குறித்து ஆரம்பத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்ட இவ்வழக்கு, பின்னர் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டதே இந்த நிதி வசூலில் ஏற்பட்ட தாமதத்திற்கும் தடைகளுக்கும் முக்கிய காரணம்.
2023 ஆம் ஆண்டின் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 111 ஆம் பிரிவின் கீழ், இலங்கை அரசாங்கத்துக்கு மாபெரும் நிதியிழப்பை ஏற்படுத்தி, கப்பல் நிறுவனத்திற்கு மறைமுகச் சாதகமாகச் செயல்பட்ட அதிகாரிகள் அல்லது தரப்பினர் யாரேனும் உள்ளனரா என்பது குறித்து ஊழல் தடுப்பு ஆணைக்குழு விரிவான புலனாய்வை மேற்கொள்ள வேண்டும்.
நாட்டின் பொருளாதாரப் பின்னடைவு மற்றும் சர்வதேசக் கடன்கள் நிலுவையில் உள்ள சூழலில், நாட்டிற்கும் பாதிக்கப்பட்ட மீனவக் சமூகத்திற்கும் கிடைக்க வேண்டிய இந்த மாபெரும் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக மீட்பதற்கு அரசாங்கமும் நீதித்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
