சபரகமுவ மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளுக்கும் GPS கண்காணிப்பு தொழில்நுட்பத்தை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (03) இரத்தினபுரி மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. முதற்கட்டமாக இரத்தினபுரி முதல் குருவிட்ட, எஹலியகொட மற்றும் அவிசாவளை பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் GPS சாதனங்கள் பொருத்தப்படவுள்ளன.
2026ஆம் ஆண்டுக்குள் அதிகாரசபையின் கீழ் இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளுக்கும் GPS தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. GPS பொருத்தப்படாத பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை எதிர்காலத்தில் புதுப்பிக்காதிருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
GPS மூலம் பேருந்துகளின் மந்தமான இயக்கம், சேவை குறைபாடுகள் உள்ளிட்ட விடயங்களை கண்காணித்து, குறைபாடுகளுடன் இயங்கும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து சேவைகள் மற்றும் பயணத் தகவல்களை பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் எதிர்காலத்தில் மொபைல் செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
