ஐக்கிய தேசியக் கட்சி தனது 80வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்நன்னாளில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் எமது இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக, அதன் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவருடைய வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,
1946 செப்டம்பர் 6ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கையின் அரசியல் வரலாற்றில் நீண்ட பாரம்பரியத்தையும், நாட்டின் அரசியல் பயணத்தில் முக்கிய பங்களிப்பையும் கொண்ட ஒரு முன்னணி அரசியல் சக்தியாக திகழ்கிறது.
மலையக மக்களின் உரிமைகள், நலன்கள் மற்றும் முன்னேற்றத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொண்டிருந்த நீண்டகால உறவு குறிப்பிடத்தக்கதாகும்.
மறைந்த பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் முதல் அமரர் ஆறுமுகன் தொண்டமான் வரை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மலையக மக்களின் நலனுக்காக பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அந்த பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இன்றைய தலைமுறையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 2023ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தில் இளம் வயது அமைச்சராகப் பொறுப்பேற்று பணியாற்றியமை எனக்கு பெருமைக்குரியதாகும்.
அதேபோன்று, கடந்த 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்கியமைக்கும், தொடர்ச்சியான நல்லுறவிற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
அதுமாத்திரமன்றி தற்போதைய பாராளுமன்றத்தின் ஐ.தே.க. இன் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற விவகாரங்களுக்கு பொறுப்பான குழுத் தலைவராகவும் நான் தொடர்ந்து செயற்பட்டு வருகிறேன் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஒற்றுமை, ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் நாட்டின் முன்னேற்றம் ஆகிய இலக்குகளை முன்னிறுத்தி பயணிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மேலும் பல ஆண்டுகள் மக்கள் பணியில் சிறப்புடன் பயணிக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
“ஒற்றுமையுடனும் உறுதியுடனும், நாட்டின் வளமான எதிர்காலத்திற்காக இணைந்து செயலாற்றுவோம்!” என வாழ்த்துகிறேன்.
