இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் சத்ய நிகேதன் (Satya Niketan) பகுதியில் அமைந்திருந்த 6 மாடி கட்டடம் ஒன்று நேற்று (06) பிற்பகல் 1:30 அளவில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் பலரும் சிக்கியுள்ள நிலையில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகிறது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ள இந்த கட்டடம், 75 படுக்கைகள் கொண்ட மாணவர்கள் தங்கும் விடுதியாக செயல்பட்டு வந்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், விபத்து நடந்த நேரத்தில் கட்டடத்திற்குள் சுமார் 50 மாணவர்கள் வரை இருந்திருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு பிரிவினர், பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து இருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலரைக் காப்பாற்றும் முயற்சிகள் தொடர்கின்றன.
சம்பவ இடத்தின் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைப் பாதுகாப்பாக மீட்க அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாகவும் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள கட்டடங்களில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் ஆரம்பக்கட்ட தகவல்களின்படி, கட்டடத்தின் கீழ் பகுதியில் அடித்தளம் (Basement) அமைக்கும் பணிகளும் புதுப்பித்தல் பணிகளும் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
தரைத்தளத்தில் புதிய இடத்தை உருவாக்குவதற்காக பலவீனமான முறையில் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்காகத் தோண்டப்பட்ட போது கீழ் தூண்கள் (Pillars) பலவீனமடைந்து கட்டடம் சரிந்து விழுந்திருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும், விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து டெல்லி காவல்துறை மற்றும் அதிகாரப்பூர்வ அமைப்புகள் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
